ஒரு ஊரிலுள்ள வியாபாரிகள் சிலர் பக்கத்து நகரத்துக்கு வியாபாரம் செய்ய செல்வதுண்டு. அவர்கள் செல்லும் வழியில் காடு ஒன்று குறுக்கிடும். அங்கே திருட்டு பயம் அதிகம். அவர்கள் ஆண்டவரை எண்ணி ஜெபித்தபடியே அந்த வழியே செல்வர்.ஒருமுறை கொள்ளையர் கூட்டம் வியாபாரிகளை வழிமறித்தது. வியாபாரிகள் தங்கள் பொருளை இழந்து விடுவோமோ என அஞ்சி நடுங்கினர். என்ன ஆச்சரியம்! கொள்ளையர்கள் அவர்கள் அருகே நெருங்கும் போது, திடீரென ஒரு <உயரமான தடுப்புச்சுவர் அவர்கள் முன்னால் எழுந்தது. கொள்ளையர்களுக்கு பேரதிர்ச்சி.இந்த "திடீர்' சுவரை அகற்ற வழி தெரியாமல் அங்கிருந்து போய்விட்டனர். அப்போது சுவர் மறைந்தது. கர்த்தரின் கருணையால் தாங்கள் தப்பியதை எண்ணி மகிழ்ந்த வியாபாரிகள் பயணத்தைத் தொடர்ந்தனர்.இதே போல இன்னும் சிலமுறை திருடர்கள், இவர்களைத் தாக்க முயல அப்போதும் அதே சுவர் எழுந்து வியாபாரிகளைக் காத்தது. ஒரு சமயம், சுவர் எழுந்தாலும், இடையிடையே இடைவெளி விழுந்திருந்தது. இதைப் பயன்படுத்திக் கொண்ட திருடர்கள் இடைவெளி வழியே புகுந்து வியாபாரிகளைப் பிடித்துக் கொண்டனர். கொள்ளையர் தலைவன், வியாபாரிகளின் தலைவரிடம், ""இத்தனை நாளும் எப்படி இந்தத் தடுப்பு சுவர் உருவானது? இப்படி ஒரு அதிசயத்தை பார்த்ததே இல்லையே,'' என்றான். வியாபாரிகளின் தலைவர் அவனிடம்,""சகோதரனே! நாங்கள் கர்த்தரை ஜெபித்தபடியே எங்கள் பயணத்தை நடத்துவோம். அந்த ஜெபமே இப்படி ஒரு மதில்சுவராக எழுந்து எங்களைக் காத்தது. இன்று எங்களில் பலரும் மிகுந்த களைப்புடன் இருந்தோம். இதனால், ஜெபத்தின் பலன் குறைந்து இடைவெளி விழுந்தது. இப்போது, உங்களிடம் சிக்கிக்கொண்டோம்,'' என்றார்.கொள்ளையர் தலைவனின் மனம் மாறியது. ""ஆஹா.. ஜெபத்தின் சக்தி இத்தகையதா! இதையறியாமல் தவறு செய்தோமே! இனி, நாங்களும் இந்தத் தொழிலைக் கைவிட்டு, நற்தொழில் கிடைக்க ஆண்டவரிடம் மன்றாடுவோம். நீங்களும் எங்களுக்காக ஜெபீப்பீர்களா?'' என மனமுருகி கேட்டான்.அனைவரும் இணைந்து ஜெபித்தனர்.""இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள். எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம் செய்யுங்கள். அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது,'' என்கிறது பைபிள். இந்த வசனத்தை நினைவில் கொண்டு, இடைவிடாது ஆண்டவரை ஜெபிப்பதன் மூலம் பாதுகாப்பான வாழ்க்கை வாழ்வோம்.
No comments:
Post a Comment